Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Thursday, October 2, 2008

சிங்கப்பூர் 2008 என் பார்வையில்


Photo: http://www.carolin-witzke.de/Webcard/Subpages/Travel/Singapore.html

மூன்றாண்டுகள் கழித்து சிங்கப்பூர் செல்கிறோம். சாதாரண இடங்களில் பெரிதான மாற்றங்கள் எதுவுமில்லை. அதே H.D.B. அடுக்குமாடிக் குடியிருப்புக்கள், அதே ஹாக்கர் சென்டர்கள், அதே அலுவலகங்கள். வழக்கம் போல ஊரைச் சுற்றி எங்கிலும் கட்டுமானப் பணிகள்.

நீண்ட நாட்களாக, வருகிறது எனச் சொல்லிவந்த கஸினோ விரைவில் திறக்கப் படும் என்கிறார்கள். பின்னே ! எல்லோரும் ஜென்டிங்கில் அல்லவா இன்றுவரை பணத்தை அவிழ்க்கின்றனர். சன்டெக் சிட்டியில், வானை நோக்கி பந்து பிடிக்கக் குவித்திருக்கும் கை விரல்கள் போல ஐந்து கட்டிடங்கள் பார்த்திருக்கிறீர்களா டாக்ஸி ஓட்டுநர் கேட்டார். அவற்றை காணும் வாய்ப்பு இந்த முறையும் கிடைக்கவில்லை.

அனைத்து M.R.T. நிலையங்களிலும் ஜன நெருக்கடி அதிகரித்திருக்கிறது. எங்கும் கூட்டம், எதிலும் கூட்டம். ஹிந்தி அதிகம் காதில் விழுகிறது எங்கிலும். ஒரு சுற்றுலாத் தளத்திற்கு சென்றால், பாதிக்கும் மேல் நம்ம இந்திய மக்கள் தான். குறிப்பாக ஹிந்திக்காரர்கள்.

ஆன்லைனில் விசா தருகிறார்கள். அள்ளி அப்புகிறது ஜனத்தொகை. முன்னர் வெகு சிரத்தை எடுத்து நிரந்தரக் குடியுரிமை பெறவேண்டும். இப்போது வெகு சுலபமாக இருக்கிறது. தீப்பெட்டி வீடுகள் விலை ஏற்றத்தினால், விற்கலாம் என்று இருந்தவர்கள் கூட, இன்னும் கொஞ்சம் ஏறட்டும் என்று விற்காமல் இருக்கிறார்கள்.

சீனர்களின் முகத்தில் வழக்கம் போல சிரிப்பில்லை. ரயில்களில், ஒருவர் எழுந்து இறங்க, அதே இருக்கையில் அமரும் மற்றொருவர், முதலில் இருக்கை நுனியில் அமர்வார். நேரம் செல்லச் செல்ல, கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து நன்கு அமர்வார். இன்றும் இப்பழக்கம் நடைமுறையில் உள்ளது :))

சீன இளைஞர்களிடம் ரொமான்ஸ் கொறஞ்ச மாதிரி தோன்றுகிறது ! சாதாரணமா பஸ்ஸிலோ, ரயிலிலோ குறைந்த‌து நாலைந்து ஜோடிகளாவது சரிந்து விழுந்திருப்பர். இன்று, ஒரு ஜோடி பார்ப்பதே அபூர்வமாயிருக்கிறது.

முன்னர் பார்த்த அளவிற்கு சுத்தம் இப்பொழுது இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. பஸ் நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கடைகள் என ஆங்காங்கே குப்பைகள் கண்களில் படுகின்றன.

குருணை தூவ, கொக் கொக் என்று கத்தி, டக் டக் என்று கொத்தி உண்ணும் கோழி போல கைத்தொலைபேசிகளில் விரல்களில் விளையாடி இன்றும் டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்புகின்றனர்.

எவ்வளவோ ஆயிரங்களில் டாக்ஸி ஓடினாலும், இன்றும் குறிப்பிட்ட நேரங்களில் டாக்ஸி பிடிப்பது ஒரு சாகசமாகவே இருக்கிறது. அதற்காக சொந்தமாக வாகனம் வாங்குபவர்களின் எண்ணிகையும் குறைந்தபாடில்லை. எல்லோரும் புதிதாக வாங்கதான் விரும்புகிறார்களாம். யாருக்கும் பயன்படுத்திய கார் வாங்க விருப்பம் இல்லையாம். எல்லாம் மெர்ஸிடிஸ், லெக்ஸஸ் போன்றவை. பாருங்க இதோ, அதோ என்று டாக்ஸி ஓட்டுநர் நமக்குக் காட்டுகிறார்.

ஞாயிறு மாலைகளில், தேக்கா மார்க்கெட் செல்ல எந்த ஒரு டாக்ஸிகாரரும் வரமாட்டார். இன்றும் அதே நிலை தான். நாங்கள் சென்று இறங்கியது ஞாயிறு மதியம். 'அங் மோ கியோ'விலிருந்து மாலை சிராங்கூன் செல்லலாம் என டாக்ஸிக்கு நின்றால், பச்சை தலை எழுத்து இருந்தாலும், நம்மைப் பார்த்தவுடன் (கண்டிப்பா இவன் தேக்கா தான் போறான் என்றெண்ணி) நிற்காமல் பறக்கின்றனர் :(

ரயிலில் கூட்டத்தோடு பயணித்து சென்றால், இறங்கிய பின்னும் நடக்க முடியாத அளவிற்கு எங்கும் மக்கள் வெள்ளம். காய்கறி வியாபரம் கொடி கட்டிப் பறக்கிறது. வரிசையாக நகைக் கடைகள் அழகாக ஜொலிக்கிறதே அன்றி வாங்குவோரைக் காணவில்லை.

கோவில்களிலும் கூட்டம் அலை மோதுகிறது. முஸ்தாபா ஷாப்பிங் பற்றி கேட்கவே வேண்டாம். வார நாட்களிலும், பகல் என்ன, இரவென்ன கூட்டத்திற்கு குறைவில்லை. ஆனால் ... நகை செக்ஷன் பக்கம் யாரும் அதன் அழகை பார்க்க கூட போக மாட்டேன் என்கிறார்கள். மூன்று ஆண்டுகள் முன்னர், ஒரு கிராம் 19 வெள்ளி, இப்போ கிட்டத்தட்ட 40 வெள்ளி.

தேக்கா மார்க்கெட்டும் கட்டுமானப் பணிகளில் மூடிக் கிடக்க, வங்கி ஏ.டி.எமில் இருந்து பணம் எடுக்க ரொம்ப சிரமமாகப் போய்விட்டது. அவ்வளவு கூட்டத்திற்கும் ஒரே ஒரு ஏ.டி.எம். அதுவும் குட்டி இந்தியக் கடை அடுக்குகளுக்குள், அனுமார் வால் போல நீண்ட க்யூ வேறு.

காந்தி, பனானா லீஃப் போன்ற உணவகங்கள் வழக்கம் போல கூட்டம் இருக்கிறது. ஆனால் ஆந்திரா கரி, கோமளாஸ் போன்ற உணவகங்கள் காற்று வாங்குகிறது. யீஷுன் பனானா லீஃபிலும் க்யூ கட்டி வாங்குகின்றனர் இன்றும்.

படப் பொட்டியை எடுத்துச் சென்றும், நேரமின்மை காரணத்தால் பொறுமையாக அனுபவித்து சிங்கப்பூரைச் சுட முடியவில்லை. அங்கிருப்பவர்கள் போல நம்மையும் பி.ஸி.ஆக ஆக்கிவிட்டார்கள் :))

Tuesday, July 15, 2008

ஹூஸ்டன் பயணம் - 4 - மூடிஸ் கார்டன்

ஜூலை 06, ஞாயிறு.

காலை எழுந்து ஹோட்டலிலேயே ப்ரேக்ஃபஸ்ட் முடிச்சாச்சு. எல்லாம் பேக் பண்ணி, ஒரு முறை எதும் மிஸ்ஸாகி இருக்கா என்று சரி பார்த்து, செக்‍அவுட் செய்து மூடிஸ் கார்டன் சென்றோம். மணி அப்பொழுதே காலை பதினொன்று ஆகியிருந்தது.

இங்கிருந்து ஊருக்குச் செல்ல பத்து மணி நேரம் ட்ரைவ். நண்பன் முன்னாடியே சொல்லியிருந்தான், ரெய்ன் ஃபாரஸ்ட் மிஸ் பண்ணக் கூடாது என்று. அப்புறம் 'டைட்டானிக்' பற்றி புதுசா காட்சிக் கூடம் ஆரம்பித்திருக்கிறார்கள் அதுவும் பார்க்கணும் என்று. ஊருக்கு ட்ரைவ் பண்ணும் நேரத்தைக் கணக்கிட்டு 'ரெய்ன் ஃபாரஸ்ட்' மட்டும் டிக்கட் வாங்கினோம்.

சிங்கையில் சென்டோசாவா, இல்ல‌ வேறு த‌னி இட‌மா என்று ச‌ரியே நினைவில் இல்லை. அதே போல் தான் இதுவும். ஆனால் இங்கு வெளித் தோற்றம் பெரிய கண்ணாடி பிரமிட் போன்றது. உள்ளே நிறைய‌ வ‌ண்ண‌ங்க‌ளில் பூக்கள், பறவைகள், த‌வ‌ளைக‌ள், பாம்புக‌ள், ஒரு மகாப் பெரிய‌ அனகோன்டா கூட‌.

தவளையைத் தொட்டால் எப்படி இருக்கும், அதன் பாதம் எப்படி இருக்கும் என்றெல்லாம் செயற்கையாய் செய்து வைத்து, நம்மை தொட்டுப் பார்க்கச் சொல்கிறார்கள். இப்படித் தான் இருக்கும் என்று. இதை ஏன் தொட்டுப் பார்க்கச் சொல்கிறார்கள் என்று ஒரு கேள்வி என்னுள். அப்புறம் தான் தெரிந்தது, இவர்கள் எங்கே நிஜத் தவளை பிடித்திருக்கப் போகிறார்கள் என.

சின்ன வயசில நாம பிடிக்காத தவளையா. அதும் மழைக் காலங்களில், சட்னியில் கொட்டிய தாளித்த கடுகு மாதிரி :), தெருவோரம் ஓடும் நீரில் எவ்வளவு குட்டி குட்டித் தவளைகள் மிதக்கும். சிலவற்றைப் பிடித்து கண்ணாடி டம்ளர்கள், தீப்பெட்டி டப்பாக்கள் என போட்டு வைப்போமே ! அதெல்லாம் மேற்கத்தியர்களுக்கு எட்டாக் கனி தானே.

இத‌னைக் க‌ட‌ந்து உள்ளே சென்றால், நெடுங் க‌ண்ணாடிக் கூரை. அங்கு ஏக‌ப்ப‌ட்ட‌ ப‌ற‌வையின‌ங்க‌ள் சுத‌ந்திர‌மாக‌ விட்டிருக்கிறார்க‌ள். பல வண்ணங்களில் மக்காவ்கள். இரு பஞ்சவர்ணக் கிளிகள். அணில்கள், வௌவால்கள், ஆமைகள், மீன்கள், பல்லிகள், பல விதமான‌ பறவைகள், மற்றும் பூக்கள்.

ஆங்காங்கே சில இளம் வயதினர் பாம்பையோ, பல்லியையோ வைத்து, அங்கு கூடும் மக்களுக்கு அதனைப் பற்றிய செய்திகள் கூறுகிறார்கள்.

பீச்சுக்கு அப்புறம் குட்டீஸ் விரும்பிய இடம் இந்த 'ரெய்ன் ஃபாரஸ்ட்'

நேரம் இருந்தால் நல்லா ஒரு நாள் செலவழிக்கலாம் இந்த கார்டனில். கார்டனுக்குள்ள நிறைய இருந்தாலும், நாங்க போகணும் என்று முடியாமல் போனது 'டைட்டானிக்', அப்புறம் 'பால்ம் பீச்'. என்ன குழந்தைகள் நல்லா நீரில் விளையாடி இருக்கும்.

ரெண்டு மணி நேரம் சுற்றி விட்டு, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிகிட்டு, ஒன்னரை மணிக்கு வண்டியைக் கிளப்பினோம். வழியில் சில ட்ராபிக் ஜாம்கள், சில நிறுத்தங்கள் எல்லாம் தாண்டி வீடு வந்து சேர அதிகாலை இரண்டு மணி.

தூங்கி எழுந்து அலுவலகம் ஓடணுமே என்று நினைக்கும்போது ஒரு பக்கம் கவலையா இருந்தாலும், ஒரு திருப்தியான ட்ரிப் போய்ட்டு வந்ததை நினைத்து நிம்மதியாகத் தூங்கினோம் அன்று.

கீழே படங்களைக் கண்டு ரசியுங்கள்.

-----


ரெய்ன் ஃபாரஸ்ட் பிரமிட்


ஆரஞ்சும் பச்சையும் போட்டி போடும் அழகு



பூவுக்குள் புல்


லேவண்டர் கோதுமை ?!


சொட்டும் நீரழகா, இப் பூ அழகா ?


லேவண்டர் ஆர்க்கிட்


ஆரஞ்சு ஆர்க்கிட்


ப்ளாஸ்டிக் (போன்ற) தவளை


ப்ளாஸ்டிக் (போன்ற) தவளை


ப்ளாஸ்டிக் (போன்ற) தவளை


ப்ளாஸ்டிக் (போன்ற) டோட்


ட்ராகன் லிசார்ட்


ப்லூ டங் (நாக்க படம் எடுக்க எவ்வளவோ முயற்சித்தேன், முடியல :()


நானும் மரத்தில் தொங்குவேனே !


மலை (முழுங்கி) என பருத்து நீண்ட அனகோன்டா


நீரடியில் பஞ்சவர்ணத்தின் ரொமான்ஸ்


இன்னான்றே என்று சண்டையிடும் மக்காவ்


பூவில் தான் ஆரஞ்சு இருக்கணுமா, நாங்களும் தான்.

-----

நண்பர்களே, வ‌லையில் எனது முதல் பயணக் கட்டுரை இது (பள்ளிகளில் எழுதியதன் பின் இப்பொழுது தான் எழுதுகிறேன் :))). இதுவரை வந்து வாசித்து, ஸ்டார க்ளிக்கி, கருத்து சொல்லி, பல(வித‌)மாய் ஊக்குவித்த நல் உள்ளங்களுக்கு நன்றி ! நன்றி !! நன்றி !!!

Thursday, July 10, 2008

ஹூஸ்டன் பயணம் - 1 - ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் கோவில்

வழக்கம் போல் இல்லாம இந்த முறை ப்ளான் பண்ணதாலோ என்னவோ சிகாகோ பயணம், சூழ்நிலைகளின் காரணமாக செல்ல முடியாமல் போய்விட்டது.

கடந்த ஜூன் மாதம், மிசிசிபி ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து, மிசூரி மாகாணத்தில் பல இடங்களைச் சேதப்படுத்தியது. எங்க ஊரு பென்டன்வில்லில் இருந்து சிகாகோ செல்ல மிசூரி கடந்து தான் செல்ல வேண்டும். போன வாரம் வரை நிலவரம் இப்படியே இருக்கவே, தங்கமணி சொல்லிவிட்டார்கள், 'எதுக்கு ரிஸ்க்', அடுத்த முறை சிகாகோ பார்த்துக்கலாம்' என்று. அதனால் 'ப்ளான் B - ஹூஸ்டன்' ஆக்டிவ் ஆனது.

டெக்சாஸ் ஹூஸ்டனில் என்னவெல்லாம் பார்க்கலாம் என்று ஒரு லிஸ்ட் தங்கமணியிடம் நண்பி ஒருவர் தந்திருந்தார். என் பள்ளி கால நண்பன் ஒருவன் பல ஆண்டுகள் ஹூஸ்டன் வாசம். அவனையும் தொடர்பு கொண்டு ஒரு ஷார்ட் லிஸ்ட் போட்டு மூன்று நாட்களில் ... மீனாஷி அம்மன் கோவில், நாசா, கேல்வஸ்டன் பீச், மூடிஸ் கார்டன், இந்தியக் கடைகள் (எங்க போனாலும் விடறாதாயில்லை :)) பார்க்க முடிவு செய்தோம்.

நாசாவிற்கு ஐந்து டாலரும், மூடிஸ் கார்டனுக்கும் இரண்டு டாலரும் ஆஃபர் இருப்பதாக நண்பன் சொன்னான். தனியே சென்றால் இந்த ஆஃபர், டீல் எல்லாம் பற்றி ரொம்ப யோசிப்பதில்லை ;) குடும்பமாக செல்லும்போது அது அத்தியாவசியமாகிறது. ஒரு இடத்தில் இருபது டாலர் மிச்சமாகிறது எனும்போது மகிழ்ச்சி தான் இல்லையா !

டிக்கட் அங்க போய் வாங்கணுமா, கூட்டம் ஜாஸ்தியா இருந்தா என்ன பண்றது என்றெல்லாம் யோசித்தால், இப்ப நிறைய இடங்களுக்கு வீட்டிலேயே டிக்கட் ப்ரிண்ட் பண்ணி எடுத்துச் செல்லும் அளவிற்கும் வசதி பண்ணியிருக்கிறார்கள். 'நாசா'வும் அதில் ஒன்று.

ஜூலை 03, வியாழன்.

சின்னஞ்சிறு வேலைகளாலே கிளம்ப மாலை ஐந்து மணி ஆகிவிட்டது. இர‌வு பதினோறு மணிக்கு டாலஸ். ஹைவே விட்டு வெளி வந்து, ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து ரூம் அவைலபிலிட்டி கேட்டால், அட நம்ம குஜ்ஜூஸ் நடத்தும் ஹோட்டல் ! இங்கு அமெரிக்காவில், ஹோட்டல் பிஸினஸில் கொடி கட்டிப் பறப்பவர்கள் குஜ்ஜூஸ் என்றால் மிகையாகாது !!! இங்கு நைட் ஸ்டே அடிச்சாச்சு.

ஜூலை 04, வெள்ளி.

டாலஸில் இருந்து காலை எட்டு மணிக்கு கிளம்பினோம். ஒரு நாலு மணி நேரம் ட்ரைவ் ஹூஸ்டனுக்கு.

கல்லூரியில் 'ட்ராவலிங்க் சேல்ஸ்மேன் பாத்' என்று (ஒரு அறுவை :)) இருந்தது. பல இடங்களுக்கு ஒரே ட்ரிப் ஷார்ட்டா கண்டுபிடிக்கணும். அப்படி ஆச்சு இந்த‌ முறை. நேரா பீச் போய்ட்டு, கோவில் போலாமா. அல்ல‌து கோவில் போனால், அன்று முழுதும் வேறு எதுவும் செய்ய‌ முடியாது. நாசா பார்க்க‌ காலை தான் சிற‌ந்த‌ நேரம் (கூட்டம் குறைவாக இருக்குமென நண்பன் சொல்லியிருந்தான்), அதுவும் இன்று முடியாது.

இந்தக் குழப்பங்களிடையே நேரே பீச், மூடிஸ் கார்டன் பார்த்துட்டு, ஸ்டே. மறுநாள் நாசா, அப்புறம் கோவில் போகலாம் என்று முடிவு செய்தோம்.

விதி வலியது என்பார்கள். ஹூஸ்டன் நெருங்க நெருங்க, வானம் இருட்டிக் கொண்டு வந்தது. எப்ப‌டி என்னை வ‌ந்து க‌டைசியில் பார்க்க‌லாம் என‌ மீனாக்ஷி அம்ம‌ன் கோபித்து கொண்டாரோ என்ன‌வோ ! சட சட வென வெள்ளை அம்புகளாய், விண்ணிலிருந்து மண்ணைத் தாக்கி பெருமழை பொழிந்த‌து. முன்னாடி என்ன நடக்குதுனே தெரியல. ஹைவேல எல்லாரும் பத்து மைல் ஸ்பீட் தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

லிஸ்டில் க‌டைசியில் இருந்த‌ கோவில் இப்ப‌ முத‌லிட‌த்தில். ச‌ரி ரூட்ட‌ மாத்துனு, சிறு பொட்டிய‌த் த‌ட்டி கோவில் போனால், ச‌ரியான வெயில். ட்ராபிக், ம‌ழை எல்லாம் தாண்டி கோவில் வ‌ர‌ ம‌திய‌ம் இர‌ண்டு ம‌ணி ஆன‌து.

ப‌ர‌ந்து விரிந்த‌ நில‌ப்ப‌ர‌ப்பில் அமைந்திருக்கிற‌து 'ஸ்ரீ மீனாக்ஷி அம்ம‌ன்' கோவில். சுற்றிலும் பெரிய மதில் சுவர். மதில் மேலே ஆங்காங்கே சிற்சில சிலைகள். கோவில் உள்ளேயும், வெளியேயும் நிறைய மரங்கள். பசும்புற் தரைகள். ராஜகோபுர‌ம் வ‌ழியே உள்ளே நுழைந்தால் ஒரு வெளிச் சுற்று பிர‌கார‌ம். நான்கு மூலைக‌ளில் ச‌ந்நிதிக‌ள். துர்கை, விநாய‌க‌ர், ஐய‌ப்ப‌ன், முருக‌ன், ராம‌ர், ல‌க்ஷ்ம‌ண‌ர், ந‌ட‌ராஜ‌ர், ந‌வ‌க்கிர‌ங்க‌ள் என‌.

நுழைவாயில் இருந்து நேரே அம்ம‌ன் ச‌ந்நிதி (அதன் எதிரே வெளியில், சிறிய‌ துவ‌ஜ‌ஸ்த‌ம்ப‌ம், குட்டி ந‌ந்தி ம‌ண்ட‌ப‌ம்). கோவிலின் உள்ளே ஒரு பெரிய ஹால் போன்ற பரப்பில் நடுவில் மீனாக்ஷி அம்மன், இட‌ப்புற‌ம் சிவ‌ன், வ‌ல‌ப்புற‌ம் வெங்க‌டாஜ‌ல‌ப‌தி. இன்ன‌பிற‌ சுவாமி சிலைக‌ள்.

நம்ம ஊரு கோவில் போல அட்டகாச வர்ணப்பூச்சு இல்லாத, வெண்மஞ்சளில், கோபுரம் முதல், மதில் சுவர் வரை ஒரே வர்ணம். கோவில் இன்டீரியர் விட எக்ஸ்டீரியர் அற்புதம். கோவிலில் பணிபுரிவோருக்கு, பின்னே வரிசையாய் குடியிருப்புக்கள். ஒரு புறம் தனிக் கட்டிடத்தில் மண்டபம், நூலகம், உணவகம். முன்னேயும், பின்னேயும் விசாலமான பார்க்கிங்க் லாட்.

ந‌ம்ம‌ ஊரு 'ஆன‌ந்த‌ ப‌வ‌ன்' போல் இருந்த‌து கோவில் கேஃப்டீரியா. இட்லி, பொங்க‌ல், ம‌சால் தோசை, பூரி, வ‌டை, ச‌ட்னி, சாம்பார். அட‌ அடா !!!

ஒரு ரூபாய் நாணய அளவுகளில் டோக்கன். மெஷினில் டாலர் போட்டு டோக்கன் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனைக் கொடுத்து உணவுகளைப் பெற வேண்டும். நல்லா ஆசுவாசமா உட்கார்ந்து சாப்பிட பெரிய ஹால். சைடில் ரெஸ்ட் ரூம்ஸ், வாட்டர் ஃபௌன்டெய்ன்.

சாப்டாச்சா, கீழே கோவில் படங்கள் பார்த்துட்டு நல்லா ரெஸ்ட் எடுங்க. அடுத்த பதிவில் 'நாசா விண்வெளி அரங்கம்' செல்வோம்.

-----


கோவில் முகப்புத் தோற்றம்


அழகிய சிற்பங்கள் கொண்ட தூண்


ராஜ கோபுரம் ('மகாநதி' ஸ்டைல்ல இருக்கா ?, அதுக்கும் முன்னாடியே தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை இவ்வாறு எடுத்திருக்கிறேன் :))


ராஜ கோபுர நுழைவு வாயில்


நந்தி மண்டபம்


அம்மன் சந்நிதி


சிவன் சந்நிதி


வெங்கடாஜலபதி சந்நிதி


எண்ணெய் விளக்கு


கோவில் உள் பிரகாரம்


இடப்புற நுழைவு வாயில்


வெளிச் சுற்று மதில்

Sunday, June 8, 2008

சிகாகோ சுத்திப் பாக்கப் போறேன்

என் இனிய இணைய தமிழ் பதிவர்களே ! வணக்கம் !!

வருகிற ஜூலை 4, விடுமுறையை முன்னிட்டு, சிகாகோ சுத்திப் பார்க்கலாம் என்று தங்கமணியின் யோசனையை நிறைவேற்றும் பொருட்டு, மூன்று நாட்களில் என்ன என்ன பார்க்கலாம் என இணையக் கடவுளிடம் கேட்ட போது, அள்ளித் தெளிக்கிறார் அவர். அதிலிருந்து எதை எடுப்பது, எதை விடுப்பது எனத் தெரியவில்லை.

சிகாகோ வாசிகளே, உங்கள் ஆலோசனைகளையும் எங்களுக்கு அள்ளித் தெளியுங்களேன்.

அட்வான்ஸ் நன்றிகள் பலப் பல.

Sunday, October 28, 2007

கிராமத்து பேருந்துப் பயணம்



விரைந்து வந்துநின்ற
அரசுப் பேருந்தில்

விறுவிறுவென ஏறும்
சுறுசுறுப்புக் கூட்டத்தினர்

ஜன்னலோரம் துண்டுபோடும்
மின்னல் மாந்தர்கள்

புகுந்து உள்ளேறும்
புத்திசாலிச் சிறுவர்கள்

இடித்துக் கீழிறங்கும்
களைத்த பயணிகள்

கூச்சலிடும் மனிதர்கள்
குழந்தையின் கூக்குரல்

திருவிழா கூட்டமென
பேருந்து நிரம்பியதில்

அமர்ந்தவர் சிலர்
அண்டிநிற்பவர் பலர்

வேகாத வெய்யிலிலும்
தேயிலைநீர் பருகி

கழுத்தில் கர்ச்சீப்போடு
கரம்சுழற்றும் ஓட்டுனர்

பயணச் சீட்டெழுதிபின்
பணவிசிறி விரலிடுக்கில்

கம்பியில் தனைச்சாய்த்து
கணக்கெழுதும் கண்டக்டர்

ஓடும் பேருந்தில்
ஓரமாய் ஜன்னலில்

காற்றின் வேகத்தில்
தேகமது சிலிர்த்திருக்க

கண்மூடித் தலைசாய்த்து
கனாக்கண்டு பயணிக்க

இனம்புரியா இன்பம்வந்து
நம்மனதைத் தாலாட்டும் !