எனது முதல் புத்தக வெளியீட்டு விழா !
அரும்பாடு பட்டு, காலம் காலமாய் காத்திருத்தலுக்குப் பின் ஏற்பாடான நிகழ்ச்சி தான் இவ்விழா. தேனாம்பேட்டை காமராஜர் நினைவரங்கில் எனது முதல் புத்தக வெளியீட்டு விழா.
மின் பதிப்பு :
null
உங்களுக்கான பிரதிக்கு "sathanga at gmail dot com" க்கு தொடர்பு கொள்ளுங்கள். அல்லது உங்கள் மின்னஞ்சல் முகவரியை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
தலைமை ஏற்று பேச எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள். முதல் பிரதியைப் பெற்றுகொள்ள ஜெயகாந்தன் அவர்கள். மற்றும் வாழ்த்திப் பேச பிரபல எழுத்தாளர்கள், சில சினிமா வி.ஐ.பிக்கள், சாலமன் பாப்பையாவும் கடைசி நேரத்தில் வருவதற்கு ஒப்புக்கொண்டார். ஸோ ஸ்வீட்டா இவர்களோடு நானும் !
அரங்கு நிறைந்த கூட்டம் என்று இல்லை என்றாலும், ஓரளவுக்கு கூட்டம் இருந்தது. பிரபலங்களைப் பார்ப்பதற்கான கூட்டம் தான், இருப்பினும் எனக்குள்ளும் சில பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கத் தான் செய்தன.
எழுத்தைப் போலவே பேச்சிலும் எளிமை காத்தார் ராமகிருஷ்ணன். "வருங்காலத்தில் இளைஞர்கள் நிறைய எழுத வேண்டும். ப்லாகில் எழுதுவது என்று நின்றுவிடாமல் பத்திரிகைகளிலும் கால் பதிக்க வேண்டும். முடிந்தால் திரைத்துறைகளிலும் கூட" என்று அன்பொழுக பேசினார். எனது கதைகளில் சிலவற்றிலிருந்து, சில வரிகள் குறிப்பிட்டு பேசியது மெய்சிலிர்க்க வைத்தது என்னை.
எழுத்தைப் போலவே பேச்சிலும் வீச்சைக் காண்பித்தார் ஜெயகாந்தன். "முதலில் ஒருவனுக்கு மொழிப் பற்று இருக்கணும். பதவி, ஆனவம், பரிசுக்காக எல்லாம் எழுதுவதைத் தவிர்க்கணும். அதை விட்டு விட்டு இன்னும் பலரின் பின்னால் ஒளிந்து கொண்டு ஜால்ரா அடித்து எழுதுவதெல்லாம் எழுத்தா ? இளைஞர்களின் சக்தி மாபெரும் சக்தி. அவர்கள் ஓரணியில் திரண்டு தமிழை வாழ வைக்கணும்" என்று சுறுக்கமாக முடித்துக் கொண்டார்.
பலரும் அவர்களது கருத்துக்களைப் பதிய, கரகோஷத்தின் எதிரொலி காதுகளில் சுழன்றது சில பல நிமிடங்கள்.
பதிவர்கள் மீட்டிங்கின் போன்டா ஃபேமஸ் இங்கும் ஏற்பாடு செய்திருந்தோம். காரைக்குடி உணவகத்தில் இருந்து மதியச் சாப்பாடு. பின் மாலையில் சாலமன் பாப்பையாவின் மாறுபட்ட "ப்லாகர் vs எழுத்தாளர்" பட்டி மன்ற நிகழ்ச்சி. வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல, நண்பர்களின் அன்புத் தொல்லை தாங்காமல் பட்டிமன்றமும் சேர்க்கும்படி ஆனது.
எல்லாம் முடிந்து, "முதல் பிரதியை பெற்றுகொள்ள ஜெயகாந்தன் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்" என்று ஒலிபெருக்கியில் எனது நண்பர் தெரிவிக்க, ஜெயகாந்தன் அவர்கள் தயாராய் வந்து நிற்கிறார். என்னால் எழுந்து செல்ல முடியவில்லை ! காலை ஆட்டிப் பார்க்கிறேன், கைகளால் காலைத் தூக்கிப் பார்க்கிறேன், ம், ஹிம்...
"எனக்குத் தெரியும் முன்னாலே இப்படி எல்லாம் நடக்கும் என்று. நீங்க பாட்டுக்கு கால ஆட்டறீங்க, கையத் தூக்கறீங்க, ஏதேதோ புரியாத மொழியில உளர்றீங்க. என்னங்க, 'புத்தக வெளியீட்டு விழாவா ?' கனவில ஐயோ, ராமா !" என்று என் மனைவி, அர்த்த ராத்திரியில் தலையில் அடித்துக் கொள்வதை, கண்கள் கசக்கி எழுந்து (தேமே என) பார்த்துக் கொண்டிருந்தேன் !!!!



