Showing posts with label தட்டான். Show all posts
Showing posts with label தட்டான். Show all posts

Sunday, June 1, 2008

தட்டான் பிடிக்க வாரீயளா ?



இறகென இல்லா
இறகை வைத்து,
பறவையாய் நீயும்
பறப்பது அழகு !

பறவையைக் கண்டான்
விமானம் படைத்தான்,
உன்னைக் கண்டா
உலங்கு ஊர்தி* படைந்தான் ?!

மெல்லத் தரையிறங்கி
அல்லிப் பூ அமர,
மலரும் பிரகாசமாய்
மயக்கும் பூவழகும்.

வளைந்த புல்நுனியில்
வாகாய் நீ அமர,
உன்னோடு சேர்ந்தாடி
களிப்புறும் புல் அழகும்.

நீண்ட வால்பிடிக்க
நீழும் எம்கைகள்,
சட்டெனப் பறப்பாய்
எட்டி வான்மீதே !

வளைத்துச் சுழற்றும்
வட்ட முகத்தில்,
எப்புறம் கண்கள்
என்புறம் காணுதே !

காற்றிலே நின்று
மேலும் கீழுமாடி,
மெல்லவே மீண்டும்
அல்லியின் மீதமர்வாய்.

இம் முறை தோற்பதில்லை
என்ற சபதம் நிறைவேற்ற,
சரிந்து பிடித்தேன் உன்னை,
என் புகைப்படப் பெட்டியிலே !!!

-----

* உலங்கு ஊர்தி = ஹெலிகாப்டர் -- நன்றி சீனா ஐயா, அன்புடன் குழுமம்.