சார்லி சாப்ளின் (நிழலும் நிஜமும்- ஒரு கற்பனை)

உருண்டைத் தொப்பியும்
வளைந்த கைத்தடியும்
தொய்வாய் ஆடையுடன்
துவளாத மனங்கொண்டு
தத்தி நீ நடக்கையிலே
தவழும் எம் மனசு.
மேலுதட்டுச் சிறு மீசை
முகபாவ அழகு சேர்க்க
புருவத்தில் கதை பேசி
புன்னகையில் எமை மயக்கி
சின்னஞ் சிறு அசைவில்
சிரிப்பை வரவழைத்து
தலை சாய்த்து இருபுறமும்
மழலையாய் பார்வையிட்டு
மெல்லிய புன்சிரிப்பில்
கல் நெஞ்சும் கரைத்திடுவாய்.
சிறுதிரையோ மற்றெதுவோ
சிதரா எம்மனதை
காணும் உன் நடிப்பில்
கட்டி வைத்திடுவாய்.
உருண்டைத் தொப்பிதனை
பெருத்த மாந்தரோடும்
வளைந்த கைத்தடியை
குலைந்த மனத்தாரோடும்
கேலியாய் உடையணிந்து
போலிகளைச் சாடுகின்றாய்.
உயரிய உடையில்லை
ஓங்கிய அழகில்லை
உருவில் ஏதுமில்லை
உணர்வுகள் அடையாளம்
என்று கற்கின்றோம்
இனிய உன் பாடம் !
