Showing posts with label கல்லூரி. Show all posts
Showing posts with label கல்லூரி. Show all posts

Thursday, December 11, 2008

உத்தரவின்றி உள்ளே வா !


Photo: inmagine.com

"ரொம்பத் தான் வித்தியாசமான ஆளுடா நீ ! இன்னைக்கு தான் பார்கறேன் என்று சொல்றே. பூனைக் கண்கள் என்கிற ஒரே காரணத்துக்காக அவளைக் காதலிக்கறேன் என்றும் சொல்றே. இதெல்லாம் நல்லதுக்கில்ல ... ஆமா ... சொல்லிட்டேன்"

கல்லூரி வாசலில் அவள் கடக்கையில், 'மியாவ்' என்று கத்தணும் போல் இருந்தது.

கேசம் புறம் தள்ளி, பூனைக் கண்களில் நோக்கி, புன்னகை பூத்து சென்றாள்.

'ம்... இவளென்ன சிரித்துச் செல்கிறாள்'. நினைவுகளோடு வகுப்புக்குச் சென்றான்.

"டேய் ... உன்னைத் தான் ... பகல் கனவு பரந்தாமா, பாடத்தை கூட நீ இப்படி கவனித்த‌தில்லையே ராசா ..." என்ற விக்கியின் பரிகாசத்தில், சரிந்து யோசனையில் இருந்த‌ ஜீவா சற்று நிமிர்ந்து அமர்ந்தான்.

ரயில் கிளம்பும் முன் இருக்கும் பரபரப்பில் இருந்தது வகுப்பறை. சள சள வென ஒரே பேச்சுக் குரல்கள். இங்கும் அங்கும் சிலர் நடந்தோடிக் கொண்டு இருந்தனர்.

முதல் நாள் கல்லூரி. முதுகலை கணிப்பொறி இரண்டாம் ஆண்டு. முதலில் ஹெச்.ஓ.டி. வந்து, பொதுவாக‌ சில செய்திகள் சொல்லி விட்டுச் சென்றார். பலர், பலருக்கும் ஏற்கனவே அறிமுகம் ஆகியிருந்தாலும், பல புதுமுகங்களும் ஆங்காங்கே தென்பட்டனர்.

"ஃபர்ஸ்ட் இயர் என்று நினைக்கறேன்" என்றான் ஜீவா.

"டேய் நாம இப்ப செகண்ட் இயர்" என்றான் விக்கி.

"அத சொல்லலடா, அவள சொல்றேன்"

"எங்களுக்கும் புரியாம‌ இல்ல‌ ... விள‌க்க‌ம் வேற‌ சொல்ல‌ வ‌ந்திட்டான்டா .. டேய் .. டேய் .. எல்லாம் இங்க‌ வாங்க‌" என்று விக்கி கூவ‌, குவிந்த‌ தாம‌ரை மொட்டாய் வ‌ட்ட‌மிட்ட‌ன‌ர் ந‌ண்ப‌ர்க‌ள்.

என்ன ??? என்ன ??? என்று எல்லோர் க‌ண்க‌ளிலும் குறுகுறுவென‌ ஒரு ஆவ‌ல்.

"சொல்றா விக்கி ... மேட்டர் என்னா ?" என்றாள் ராக‌வி.

"என்ன‌ மாமே, 'இன்னிக்கு குளிச்சிட்டு வ‌ந்திட்டேன்' என்று சொன்னே ... ம‌வ‌னே ர‌த்த‌த்தில‌ குளிப்பாட்டிருவேன்" மிர‌ட்ட‌லாய் மோபினின் குர‌ல்.

"ப்ளீஸ், இன்னிக்காவ‌து நான் சொல்ற‌த‌ ந‌ம்புங்க‌டா" கெஞ்சும் குர‌லில் விக்கி. "ந‌ம்ப‌ ஹீரோ, அதான் க‌ல‌ர்ப‌ட‌க் க‌தாநாய‌க‌ன், இது நாள் வரைக்கும் இல்லாம, ந‌ம்ம‌ ஜீவா, இப்ப ஜில்பான்ஸ்ல‌ இற‌ங்கிட்டான். பொண்ணு யாருனா ..."

ச‌ட‌ன் ப்ரேக் போட்ட‌ ர‌யில் வ‌ண்டியாய் இழுத்து நிறுத்தினான்.

"வாத்தி யாராவ‌து வ‌ருமுன், சீன‌ முடி ராசா ... நேர‌ம் ஆவுதில்ல‌ ..." அனைவ‌ரின் ம‌ன‌திலும் இவ்வ‌ரிக‌ள்.

"யாருனா ... யாருனா .. யா..." என்று சுருதி குறைத்தான் விக்கி. மார்போடு அனைத்த‌ புத்த‌க‌ங்க‌ளுட‌ன், வெளிர் ப‌ச்சைப் புட‌வையில், (க‌ண்க‌ளுக்கு மேட்சிங்காக‌ இருக்கும்) உள்ளே நுழைந்தாள் ஸ்ருதி.

'அட‌ ந‌ம்ம‌ க்ளாஸ் தானா ?!' என்று யோசிக்கும்போதே, ஆசிரியருக்கான மேசையில் புத்தகங்களை வைத்து விட்டு, திரும்பி அனைவரையும் பார்த்து, "குட் மார்னிங், ஐ ஆம் ஸ்ருதி ..." என்று அறிமுகப்படுத்திக் கொள்ள, விக்கியும், ஜீவாவும் உறைந்து தான் போனார்க‌ள்.

"இங்க திருச்சில, செயின்ட் ஜோச‌ப்பில் முதுக‌லை க‌ணிப்பொறி. பின் சென்னையில் சில‌ மாத‌ங்க‌ள் வேலை. ஆசிரிய‌த் தொழிலின் மீது ஆரம்பத்தில் இருந்தே ப‌ற்று. அத‌னால் வேலையைத் துறந்து இங்கு வ‌ந்துவிட்டேன்" என்று சுருதி பிஸ‌காம‌ல் ஸ்ருதி சொல்லிக் கொண்டே போக‌, இவை எதும் ஜீவாவின் காதுக‌ளில் விழுந்த‌ன‌வாக‌த் தெரியவில்லை.

"ம‌ச்சான், சும்மா சொல்ல‌க் கூடாது ... உன் லெவ‌லே த‌னி தான். அவங்க டீச்ச..ரா..மா ... சும்மாவே மார்க் நல்லா வாங்குவோம், இதில இவங்கள வேற பகச்சிகிட்டோம் அவ்ளோ தான். இந்த‌ விளையாட்டுக்கு நான் வ‌ர‌லபா." என்று ச‌ற்று த‌ள்ளி அம‌ர்ந்தான் விக்கி.

"இருக்கட்டுமே ... நம்மை விட‌ ஒரு வ‌ய‌சு ... மிஞ்சிப் போனா ரெண்டு வ‌ய‌சு தான் கூட‌ இருக்கும் ... இதெல்லாம் ஒரு பிர‌ச்ச‌னையா. இன்னிக்கு சாய‌ந்திர‌ம் க‌ல்லூரி விட்டுப் போகும் போது, அவ‌சிய‌ம் இவ‌ கிட்ட‌ பேச‌ப் போறேன் பாரு. கூட‌ நீ வர்ரே" என்று ஆணி அடித்தாற் போல் சொல்லிமுடித்தான் ஜீவா.

"டேய் நான் மார்க்க‌ ப‌த்தி பேசிட்டு இருக்கேன். நீ என்ன‌டானா வ‌ய‌ச‌ப் ப‌த்தி பேசற. உன் புரியாத விளையாட்டுக்கு என்னை ஏன் பலிகடா ஆக்கறே" என்று விழி பிதுங்கினான் விக்கி.

'பூனைக் கண் கண்டேன்
புவியீர்ப்பில் விழுந்தேன்

காந்த‌க் கண் கண்டேன்
க(ல்)வி மறந்து நின்றேன்.

சாந்த‌ முகம் கொண்ட‌‌
செம் மேனிப் பெண்ண‌ழகி

காந்தமாய் எனை ஈர்த்த‌
பூனைக் க‌ண்ண‌ழ‌கி.'

என்று மெதுவே விக்கியின் காதுகளில் பாடினான் ஜீவா.

"ச‌ரியாப் போச்சு ... நீ திருந்த‌ மாட்ட‌டா, போ க‌ன‌வுல‌க‌ க‌ன்டினியூ ப‌ண்ணு, நான் பாட‌த்தை க‌வ‌னிக்க‌றேன்." என்றான் விக்கி

"குட் மார்னிங்க், குட் மார்னிங்க் ... ப‌ச‌ங்க‌ளா எப்ப‌டி இருக்கீங்க‌ ... மன்னிக்கணும், கொஞ்சம் லேட்டாயிடுச்சு. விடுமுறை எல்லாம் எப்ப‌டி இருந்துச்சு" என்ற‌வாறு உள்ளே வ‌ந்தார் க‌ணித‌ ஆசான் ச‌பார‌த்தின‌ம்.

அடித்து பிடித்து, முட்டி மோதி கிடைத்த‌ இட‌த்தில், ஜீவாவின் அருகில் அம‌ர்ந்தாள் ஸ்ருதி.

சிறு பரபரப்புக்குப் பின், ர‌யில் சென்ற‌வுட‌ன் ஏற்ப‌டும் நிச‌ப்த‌ம் நில‌விய‌து அங்கே.

ஆசானை முகம் பார்த்தாலும், 'என்ன நடக்குது இங்கே' என மனம் பக்கத்தில் இருந்த ஸ்ருதியைப் பார்த்தது. 'விக்கியை நோக்கி என்னடா, என்ன வச்சி காமெடி கீமெடி பண்ணலையே' என்றும் முறைத்தது.

ஆட்காட்டி விரலை உயர்த்தி, ஒரு கண்ணைச் சிமிட்டினாள் ஸ்ருதி விக்கியைப் பார்த்து.

"டேய் என்னடா" என்று முறைத்தான் ஜீவா.

"ஃபர்ஸ்ட் இயர் சென்னையில முடிச்சிருக்கா, அப்பா ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு, சொந்த ஊருக்கே எல்லோரும் வந்துட்டாங்களாம். இவள ஹாஸ்டல்ல இருக்க சொல்லிருக்காங்க. முடியாதுனு அப்பா பின்னாடியே வந்துட்டாளாம்.

எங்க தெரு தான். இந்த லீவு முழுக்க இங்க தான் இருந்தா. இவ கிட்ட‌ பேசப் பேச, உன்னைப் மாதிரி ஒருத்தன தான் தேடிட்டு இருக்கானு தோணுச்சு. முதலில் எனக்கும் காதல் எண்ணம் இருந்தது. என் கிட்ட என்ன பழகினாலும், ஒரு டிஸ்ட‌ன்ஸ் மெய்ன்டெய்ன் ப‌ண்ற‌தை நானும் உண‌ராம‌ல் இல்லை. அத‌னால் ஒதுங்கிட்டேன்.

ஃப்ரெண்ட்ஸ் ப‌த்தி பேசும் போதெல்லாம், உன்னைப் ப‌த்தி சொல்ல‌ச் சொல்ல‌ .. அப்ப‌டியா ... இந்த‌ வ‌ய‌சு வ‌ரைக்கும் யாரையும் காத‌லிக்க‌லையா ?? த‌ம், த‌ண்ணி எதுவும் கிடையாதா ?? ரொம்ப‌ ஜோவிய‌லான‌ டைப்போ ?? என்றெல்லாம் ஆர்வ‌மா கேட்டுட்டிருப்பா.

உன‌க்கு ஞாப‌க‌ம் இருக்கா, லீவில் ஒரு நாள் ம‌லைக் கோட்டைக்கு போனோமே. நானும், நீயும் ம‌ட்டும் இல்லை. ஸ்ருதியும் வ‌ந்திருந்தா. உன்னைப் பார்க்க‌ணும் என்றாள், அதான். தப்பித்தவறி கூட பக்கத்தில வந்திராத என்று உத்தரவாதம் வாங்கித் தான் வரச் சொன்னேன்.

இது போல பட இடங்கள், பல சந்தர்ப்பங்களில் உன்னை தொடர்ந்து, உன்னை பிடிச்சும் போச்சு அவளுக்கு. முத‌ன் முத‌ல் உன்னை நேரில் ச‌ந்திக்குபோது ஒரு ஷாக் கொடுக்க‌ணும் என்று சொன்னா. அதான் இந்த 'டீச்ச‌ர்' நாட‌க‌ம்.

நேரம் இருந்தா உன்னை எழுந்திருக்க‌ சொல்லி கேள்வி எல்லாம் கேட்க‌லாம் என்று திட்ட‌ம். அதுக்கு கொடுப்பினை இல்லாமப் போச்சு. இருந்தாலும் ஆப‌ரேஷ‌ன் ச‌க்ஸ‌ஸ்" என்று சொல்லி முடித்தான் விக்கி.

விக்கித்து ல‌யித்திருந்தான் ஜீவா.


மார்ச் 3, 2009 யூத்ஃபுல் விகடனில்

Sunday, November 23, 2008

அடுக்குமாடிக் குடியிருப்பும், அடுத்தடுத்த கட்டிடங்களும்


Photo: indiaeducation.ernet.in

நீண்டு அக‌ன்ற‌ அந்த‌ அடுக்குமாடிக் குடியிருப்பு ப‌ருத்த‌ ஆல‌ம‌ர‌ம் போல‌ ப‌ர‌ந்து விரிந்து காட்சிய‌ளித்த‌து. ப‌ல்வ‌கைப் ப‌ற‌வைக‌ள் அதில் வாச‌ம் செய்த‌ன‌. ம‌ன்னிக்க‌ணும், ப‌ல்வ‌கை ம‌னித‌ர்க‌ள் அதில் வ‌சித்து வ‌ந்தார்க‌ள்.

முறையே ப‌ணி செய்து, போதுமென‌ ஓய்வு பெற்று, அறுப‌தைக் க‌ட‌ந்த‌ ஜெகந்நாதனும், ராம‌சாமியும் அங்கு வ‌ந்த‌திலிருந்து ந‌ண்ப‌ர்க‌ளும் ஆனார்க‌ள்.'ப்லாக் ஈ'இல் நாலாவ‌து மாடியில் ராம‌சாமியின் வீடு. சில ப்லாக் தள்ளி 'ஐ'இல் கீழ் தளத்தில் ஜெக‌ன் வீடு. தின‌ம் மாலை ஒருவ‌ர் வீடு மாறி ஒருவ‌ர் வ‌ந்து, சில‌ ம‌ணி நேர‌ங்க‌ள் அர‌ட்டை அடித்து விட்டு செல்வ‌து வ‌ழ‌க்க‌ம்.

"வாங்க‌ ஜெக‌ன். என்ன‌ இன்னிக்கு கொஞ்ச‌ம் லேட்டு" என்று ந‌ண்ப‌ரை வ‌ர‌வேற்றார் ராம‌சாமி.

"என்ன தான் தினம் வந்தாலும், சில முறை தவறுதலாய்ப் போயிடுது. இப்ப கூட பாருங்க, ப்லாக் எஃப் போய் கதவ தட்ட, ஒரு பாயம்மா கதவத் தெறக்கறாங்க ! நீங்க அப்படி எல்லாம் இல்லையேனு யோசிச்சா, அப்ப தான் புரியுது ப்லாக் மாத்தி வ‌ந்திருக்கேன் என்று" என்று சொல்லி இடி இடி எனச் சிரித்தார் ஜெக‌ன்.

"குசும்பு புடிச்ச‌ கிழ‌வ‌ரையா நீர். பாய‌ம்மாவ‌ பாக்கறதுக்காகவே போயிட்டு, என் மேல‌ ப‌ழிய‌ போட‌றீர்" என்று சின‌ம் கொள்வ‌து போல‌ ந‌டித்தார் ராம‌சாமி.

"நான் பாய‌ம்மாவ‌ பாக்க‌ப் போன‌து இருக்க‌ட்டும். இந்த‌க் க‌தையையும் கேளும். என் நண்ப‌னின் ம‌க‌ன் ஒருவ‌ன் பாலாஜி என்ஜினிய‌ரிங் க‌ல்லூரியில் பேராசிரிய‌ரா சேர்ந்திருக்கான். ஆர‌ம்ப‌ நாட்க‌ளில் சில‌ வார‌ங்க‌ள் க‌வ‌னித்திருக்கிறான், மாண‌வ‌ர்க‌ளில் சில‌ர் காணாம‌ல் போவ‌தும், புதுமுக‌ங்க‌ள் வ‌ருவ‌தையும்."

"நீர் என்ன‌ சொல்ல‌ப் போறீர் என்று புரிந்து விட்ட‌து. என்ன‌ வ‌குப்பு மாறி வ‌ந்து போனார்க‌ள் ... ச‌ரியா ... க‌ண்டுபிடிச்சிட்டேன் பாரும்" என்று பெருமித‌ம் கொண்டார் ராம‌சாமி.

"வ‌ய‌சுக்கேத்த‌ பொறுமை எப்ப‌ தான் வ‌ர‌ப்போகுதோ உம‌க்கு. இப்ப‌டி குறுக்கே பேச‌க்கூடாது, அப்புற‌ம் சுவார‌ஸ்ய‌ம் கொறஞ்சு போயிடும், பொறுமையா கேளும்" என்று தொட‌ர்ந்தார் ஜெக‌ன்.

ஒரு நாள், புதுசா வ‌ந்த‌ சில‌ முக‌ங்க‌ளை, 'எங்கே இவ்வ‌ள‌வு நாட்க‌ள் காண‌லை, இப்ப‌ தான் உங்க‌ளைப் பார்க்கிறேன்' என்று கேட்டிருக்கிறான். ஒருவ‌ன், 'நான் இந்த ப‌க்க‌த்தில் இருக்கும் வெங்க‌டேஸ்வ‌ரா என்ஜினிய‌ரிங் க‌ல்லூரிய‌ ந‌ம்ம‌ க‌ல்லூரினு நென‌ச்சுப் போயிட்டேன்' என்றானாம். ம‌ற்ற‌வ‌ளோ, நான் அந்த‌ப் ப‌க்க‌ம் இருக்கும் மேரிமாதா என்ஜினிய‌ரிங் க‌ல்லூரிக்குப் போயிட்டேன் என்றிருக்கிறாள்.

இவ‌னுக்கோ ஆச்ச‌ரிய‌ம் தாங்க‌லை. 'அப்ப‌ காணாமப் போன‌வ‌ங்க‌ ??!!' என்று வியந்து கேட்க, 'அவ‌ங்க‌ எல்லோருமே, இதே போல‌ அதே தெருவில் வருசையாய் இருக்கும், ராஜு என்ஜினிய‌ரிங் கல்லூரி, விக்ர‌ம் என்ஜினிய‌ரிங் க‌ல்லூரி, ஜ‌லால் என்ஜினிய‌ரிங் க‌ல்லூரி என்று ஏதாவ‌து ஒன்றைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளாய் இருப்பார்க‌ள்' என்றிருக்கின்ற‌ன‌ர் கோர‌ஸாய்.
உடனே, தான் சரியான கல்லூரியில் தான் இருக்கிறோமா என ஒருமுறை வெளியே வந்து தகர போர்டைப் பார்த்து உறுதி செய்திருக்கிறான்." என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லி, இடி முழக்கச் சிரிப்பைத் தொடர்ந்தார் ஜெகன்.




ஏப்ரல் 08, 2009 யூத்ஃபுல் விகடனில்