Showing posts with label அரைப் பக்கக் கதை. Show all posts
Showing posts with label அரைப் பக்கக் கதை. Show all posts

Thursday, October 29, 2009

கட்டழகி ...


Photo Credit: Bernat Casero

கடந்த சில வாரங்களாகவே அவளிடம் அந்த மாற்றம் ஏற்பட்டிருந்தது. முன்னைப் போல‌ அவ‌ள் இப்போது இல்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போய் அவளைப் பார்க்க வேண்டும்.

போன மாதம் கூட அவளைப் பார்த்த போது அப்படி ஒரு வசீகரம். கரும்பச்சையில் தலைமுடிச் சாயம். சிலர் தங்கள் தலைக்கும் அடிக்கும் வண்ணங்களைப் பார்த்தால் சகிக்காது, ஆனால் இவளுக்கோ வெகு நேர்த்தியாக‌ இருந்தது. ஆங்காங்கே கோர்த்த சிவ‌ப்பு முத்துக்க‌ள் த‌லைமுடியுள் தொங்கின‌. த‌ன்னை அல‌ங்க‌ரித்துக் கொள்வ‌தில் அவ‌ளுக்கு நிக‌ர் அவ‌ளே.

முதன் முதலில் அவளை எங்கே சந்தித்தேன் ... ம்ம்ம்ம் ...

இந்த ஊருக்கு வந்த புதிதில், பால் வாங்க கடைக்குச் சென்ற போது, ஒரு தெரு முனையில் தான் அவளைப் பார்த்தேன். அவளது வனப்பும், வடிவும், கலகலப்பும், பார்த்துக்கொண்டிருக்கும் போதே, என் இதயத்தைக் பறித்துக் கொண்டாள் அந்தக் கொள்ளைக்காரி.

இரண்டு தெருக்கள் சேரும் முனையில் இருந்தது அவளது வீடு. அவள் வசிப்பதாலோ என்னவோ அவள் வீடும் அழகாகவே இருந்தது. வீட்டின் ஜன்னல் சாய்ந்து, கை காட்டி சிரித்துப் புன்ன‌கைத்தாள். யாராவ‌து க‌வ‌னிக்கிறார்க‌ளா என‌ சுற்றி முற்றி பார்த்துக் கொண்டேன். ந‌ல்ல‌ வேளை யாரும் க‌வ‌னிக்க‌வில்லை.

பச்சை வண்ண‌ம் மாற, அங்கிருந்து நகர மறுத்த என்னை, 'நான் இங்கே தான் இருப்பேன். நாளை சந்திக்கலாம்' எனக் கை அசைத்து அனுப்பி வைத்தாள். எனக்குப் பின் நின்ற வண்டிக்காரன் ஹாரன் அடித்து என் வயிற்றெரிச்சலை வேறு கட்டிக் கொண்டான்.

அன்றிலிருந்து அவளது தெருப்பக்கம் அடிக்கடி போக ஆரம்பித்தேன். எப்போது சந்தித்தாலும் அவ‌ள் அதிக‌ம் பேசுவ‌தில்லை. நான் பேசாம‌ல் இருப்ப‌தில்லை. காதுகளில் கிசுகிசுப்பாள், கலகலவெனச் சிரிப்பாள், திடீரென சோவென அழுவாள். அவளுடன் இருந்தால், மணிக்கணக்கும் நொடிப் பொழுதே. நாட்க‌ள் செல்ல‌ச் செல்ல‌ நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்கள் ஆனோம். ஆறே மாதங்கள் தான் என்றாலும் ஆறேழு வருடத்திற்கு இணையாக இருந்தது எங்கள் நட்பு.

"திரும‌ண‌ம் ஆன‌வ‌ன் நீ. இப்படி அவளையே சுற்றி வந்தால் உன் மனைவி என்ன நினைப்பாள்" என‌க் க‌டிந்து கொண்டான் ந‌ண்பன். என் காதுகளில் எதுவுமே விழவில்லை. அழகான மனைவி ஒரு புறம் இருந்தாலும், இவளின் மேல் பிரியமும் தவிர்க்க முடியாமல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்தது.

சொல்ல‌ ம‌ற‌ந்துவிட்டேனே ! வனப்பும், வடிவும் தானே தவிர, அவள் அங்கமெல்லாம் தங்கம் இல்லை, க‌ருப்பி தான். ஆனால் க‌ட்ட‌ழ‌கி. அந்த‌க் க‌ட்ட‌ழ‌கிற்கு தான் இப்போது ப‌ங்க‌ம் வ‌ந்திருக்கிற‌து.

அவளைப் பார்த்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியிருந்தது. அலுவலக நிமித்தம் வெளியூர் சென்றுவிட்டு இன்று தான் ஊர் திரும்பியிருந்தேன். "இப்ப தான வந்தீங்க, அதுக்குள்ள எங்கே கிளம்புறீங்க ?" என்ற மனைவியின் வார்த்தைகளை உதாசீனம் செய்து அவளைப் பார்க்கக் கிளம்பினேன். கையோடு காமெராவையும் எடுத்துக் கொண்டேன்.

வ‌ண்ண‌ச் சாய‌ங்க‌ள் அடித்து அடித்து முடி எல்லாம் ப‌ழுப்பாகிக் கொட்டியிருந்த‌து. இப்போது அவளிடம், கிசு கிசு பேச்சு இல்லை, கல கல சிரிப்பு இல்லை. இப்படி ஆகும் என்று முன்னரே தெரியும். இருப்பினும் இந்த நிலையில் அவளைப் பார்க்க என் மனம் ப‌ழ‌கியிருக்க‌வில்லை.

'அழ‌காய் இருக்கும்போது குழையக் குழைய‌ வ‌ளைய‌ வ‌ந்தாய். இப்ப எல்லாம் போச்சு. நீயும் என்னை வெறுத்து ஒதுக்கிவிடுவாயா ?' என்ப‌து போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

யாருமே அங்கில்லை. துளியும் யோசிக்காம‌ல், கிட்டே சென்று அவளை இறுக‌க் க‌ட்டிப் பிடித்துக் கொண்டேன். முன்னரே தானிய‌ங்கியில் போட்டுவிட்ட காமெராவில், க்ளிக், க்ளிக் என்று சில‌ ப‌டங்க‌ள் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினேன். 'இன்னும் சில மாதங்களில் எல்லாம் ச‌ரியாகிவிடும், கவலைப்படாதே' என்று அவ‌ள் என்னைத் தேற்றி அனுப்பிய‌து ஆறுத‌லாய் இருந்த‌து.

"வந்ததும் வராததுமா, அந்த மொட்டை மரத்தைப் படம் பிடிக்கத் தான் போனீங்களாக்கும் !" என்று தாளிக்கும் க‌டுகோடு சேர்ந்து கொண்டாள் என் ம‌னைவி.

Tuesday, June 16, 2009

கல்விச் செல்வம் - அரைப் பக்க கதை

"இதுவரைக்கும் படிச்சதெல்லாம் சும்மா தான். இனிமேல் தான் கவனமா இருக்கணும். எப்படியாவது இங்க சீட் வாங்கிறனும். என்ட்ரன்ஸ் நல்லா பண்ணு. கௌன்ஸிலிங்ல தைரியமா பேசு. எதுவும் தெரியாதுனு சொல்லாதே. என்ன சரியா ?"

அம்மாவும், அப்பாவும், இருபுறம் இருந்து மத்தளம் வாசிக்க, பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் ரேஷ்மா. 'ஏன் இப்படி போட்டு டார்ச்சர் பண்றீங்க' என்பது போல இருந்தது அவள் பார்வை.

"பக்கத்து வீட்டு பொண்ணு இங்க படிச்சு தான் எம்.ஐ.டி. சேர்ந்திருக்கா. ஞாபகம் இருக்கில்லங்க உங்களுக்கு" என்று அம்மா, அப்பாவை இடித்தாள்.

இரவெல்லாம் கண் விழித்துத் தயார் செய்ததில், காலையிலேயே சோர்வாய் இருந்தாள் ரேஷ்மா.

லீவு நாட்களில் கூட சும்மா இல்லை. அந்த கோச்சிங், இந்த கோச்சிங் என்று படு பி.ஸி. தான்.

"நீங்க ஹாஸ்டல் எடுத்துக்கிட்டீங்கனா, இங்க சீட் கண்டிப்பா கிடைக்கும்" என்றார்கள்.

"ஹாஸ்டலில் இருந்துவிடுவாளா ? பழக்கமே இல்லையே ! இன்று வரை எங்களை விட்டுப் பிரிந்து இருந்ததில்லை" என்றார் அப்பா.

"அதெல்லாம் பிள்ளைங்களோட பிள்ளைங்களா இருக்கும்போது பழகிடும் சார். சரி, போய் ஆஃபீஸ்ல ஃபீஸ் கட்டி, ரெஸிப்ட் வாங்கிக்கங்க" என்றார் ரேஷ்மாவை நேர்முகம் செய்த ஆசிரியை.

"ஸ்டூடண்ட் பேரு என்னங்க ?" என்றார் ரைட்டர்.

"ரேஷ்மா"

"எந்த க்ளாஸ் ?"

"எல்.கே.ஜி. !"

Tuesday, June 2, 2009

சப்தம் வரும் நேரம் (அரைப் ப‌க்க‌க் க‌தை)

வழக்கத்தை விட நரேன் அன்று பரபரப்பாக இருந்தான்.

இரண்டு நாட்களாக கேட்காமல் இருந்த சப்தம் மீண்டும் இன்று. நேரம் நடுநிசியைத் தாண்டிவிட்டிருந்தது. ச‌மைய‌ல‌றையின் பின்ப‌க்கம் இருந்த அறையில் ட‌க், ட‌க் என்று அந்த ச‌ப்த‌ம். ரொம்ப‌ நாட்க‌ளாக‌வே அந்த‌ அறையைப் ப‌ய‌ண்ப‌டுத்துவ‌தில்லை. ச‌மீப‌ கால‌மாக‌, அந்த‌ அறையில் ஆள்ந‌ட‌மாட்ட‌ம் இருப்ப‌து கேட்டு அதிர்ச்சியுற்றான்.

"ஏங்க, ஏதாவ‌து காத்து க‌ருப்பா இருக்குமோ ?" என்று ப‌ய‌ந்த‌ ம‌னைவியை, "எதுக்கும் கொஞ்ச‌ நாளைக்கு உங்க‌ அம்மா வீட்டில் இரு" என்று அனுப்பினான்.

'எப்படியும் இந்த முறை மிஸ் பண்ணிடக்கூடாது. இருக்கும் நேரமும் மிகக் குறைவே. ஒரே அடி, அடி துல்லியமா தலையில் விழணும்... காத்தாவது கருப்பாவது ...' மனதைத் தயார் படுத்திக் கொண்டான் ந‌ரேன்.

பக்கத்து அறைக்குச் சென்று, சமயலறைக் கதவை மெல்ல சாத்தினான். இரண்டு வழிகள் இந்த அறைக்கு. ஒரு வழியை அடைத்தாயிற்று, மற்றொன்று அந்த அறையில் மற்றொரு புற‌ம் இருந்தது. அங்கு கதவு காற்றில் மெல்ல ஆடிக் கொண்டிருந்தது. கீற்று போன்ற‌ வெளிச்ச‌ம் க‌த‌விடுக்கில் தெரிந்த‌து.

'காத்தாவ‌து க‌ருப்பாவ‌து என்று சொல்லிகிட்டாலும், நெஞ்சுக்குழி அடைத்துக் கொண்ட‌து' ந‌ரேனுக்கு. டொக் டொக் என்ற‌ சப்த‌ம் மேலும் அதிக‌ரித்த‌து. மிக‌வும் க‌வ‌ன்த்துட‌ன், சிறிய‌ சப்த‌ம் கூட தான் எழுப்பாம‌ல், ச‌ப்த‌ம் வ‌ந்த‌ திசையை நோக்கி முன்னேறினான்.

கிட்டே நெருங்கி, ஒரே போடு ... சில நொடிகளில் ச‌ப்த‌ம் அட‌ங்கி விட்டிருந்த‌து.

"ரொம்ப‌ நாளா டார்ச்ச‌ர் ப‌ண்ணுச்சே அந்த‌ எலி, அது காலி. நீ தைரியமா புற‌ப்ப‌ட்டு வ‌ர‌லாம்" என்று ம‌னைவிக்கு ஃபோன் செய்தான் நரேன்.

ஜூன் 3, 2009 யூத்ஃபுல் விகடனில்