நான் சிரித்தால் தீபாவளி
சென்ற சனிக்கிழமை எங்க கிராமத்தில் ஒரு கிறிஸ்துமஸ் பரேட். முதியோர் முதல் குழந்தைகள் வரை அனைவரின் முகத்திலும் ஒரு உற்சாகம். தனி மனிதராகவோ, பர்சனல் டீமாகவோ, பள்ளிக் குழந்தைகள் குழுவாகவோ, அல்லது நிறுவனங்களின் குழுவாகவோ ... அணிவகுப்பில் கலந்து கொண்டனர். வண்ண வண்ண ஆடைகள், அலங்கார வண்டிகள், ஆடிப்பாடும் சிறுவர்கள், மிட்டாய்கள் தூவிச் செல்லும் பெரியவர்கள்.
இந்தியாவிலும், சிங்கையிலும் இருந்த வரையில், கிறுஸ்டியானிட்டி என்றால், எங்கே நம்மையும் மதம் மாத்திடுவாங்களோ என்ற நினைப்பு கூடவே இருக்கும், அது சார்ந்த மனிதர்களுடன் பழகும்போது. கறுப்பு வெள்ளை உடுப்பில் அந்நிய தேசத்தார் நம் பக்கம் வந்து பேச்சுக் கொடுப்பர். பொது நல விசாரணைக்குப் பின், மெதுவே மதம் சார்ந்து பேச்சு செல்லும், முடிந்த வரையில் இங்கு பை சொல்லிவிடுவேன்.
வேடிக்கையாக என் நண்பன் ஒருவனின் செயல் இன்று நினைத்தாலும் ஆச்சரியம் தரும். இவனிடமும் இருவர் ரயிலில் பேச்சுக் கொடுத்து வந்து, இந்த வார இறுதியில், இந்த சர்ச்சில், இந்த நிகழ்ச்சி இருக்கு, வந்து தான் பாருங்களேன் என்றிருக்கின்றனர். அவனோ, ஒரு கோவில் முகவரி சொல்லி, இங்கு, இத்தனை மணிக்கு ஒரு நிகழ்ச்சி, நீங்க வந்து பாருங்க என்றிருக்கிறான். அவர்கள் இருவரும் இவனுக்கு பை சொல்லிக் கிளம்பிவிட்டனராம்.
அமெரிக்கா வரும் முன் வரை, இங்கும் மதம் சார்ந்து தான் கிறிஸ்டியானிட்டி இருக்கும் என நினைத்தேன். ஆனால் அந்த அளவுக்கு இல்லை. மதத்திற்கும் அப்பாற்பட்டு, ஒரு கலாச்சர உணர்வு தான் கிடைக்கிறது. ஊர்வலம் கூட ஒரு மதம் சார்ந்த ஊர்வலம் போல் அல்லாது, கலாச்சார ஊர்வலமாகவே தோன்றியது. அத்தனை வண்டிகள், குழுக்களிலும் கூட மதம் சார்ந்த படங்கள் ஒன்று கூட இல்லை.
வித விதமாய் குழுக்கள் ஊர்திகளில் வந்தாலும், எங்களைக் கவர்ந்த சில ...
கை படப் பெட்டியில் படம் பிடித்துக் கொண்டே இருந்த போது, சட்டெனக் கவர்ந்தது ஒரு ஊர்தியில் எழுதியிருந்த வாசகம். "மிஸ் நார்த் வெஸ்ட் ஆர்க்கன்ஸா". அவர் கையில் இருந்த குட்டி நாய்க்குட்டியும் கூட அழகாய் இருந்தது :)) அட அழகிகள் கூட கலந்துக்குவாங்களா என அதிசயிக்க, தொடர்ந்து, "மிஸ் பென்டல்வில்", "மிஸ் பென்டன் கௌன்ட்டி", "மிஸ் ..." எனத் தெருவாரியாக (கொஞ்சம் மிகைப் படுத்தியிருக்கிறேன் :)) வரிசையாய் அழகிகள் ஊர்திகளில்.
நாய்(க்குட்டி)கள் பிடித்த படி ஒரு தொண்டு நிறுவனக் குழு உறுப்பினர்கள். ம்ம்ம். இதுவும் வித்தியாசமா இருக்கே எனப் பார்த்தால், அவற்றின் சட்டை (போன்ற உடை)யில் "அடாப்ட் மீ" என வாசகம்.
எங்கள் மூத்த மகன் பள்ளியிலிருந்து "ஸ்வாம்ப் பேன்ட்" என்ற இசைக் குழு. நாற்பதுக்கும் மேல் குழந்தைகள். ரெகார்டர் எனும் (புல்லாங்குழல் போன்றது) வாத்தியத்தில் ஐந்தாறு கிறிஸ்துமஸ் பாடல்கள் ஊர்வலத்தில் இசைக்க.
ஒன்பதரைக்கெல்லாம் மைதானத்துக்கு வந்துவிடுங்கள் எனப் பள்ளியில் இருந்து அறிவிப்பு வந்திருந்தது. பையனுக்காக சனிக்கிழமை காலைத் துயிலைப் புறக்கணித்து சீக்கிரம் எழுந்து தயாரானோம். குளிர் என்றால் அப்படி ஒரு நடுக்கம். கோட் எல்லாம் போட்டு நமக்கே நடுக்கம் தாங்கலை. பையன் நாலைந்து உடை அடுக்குகள் தாண்டி, பேன்ட் டிஷர்ட் போட்டு வந்தான். டிஷர்ட் வெளிய தெரியணுமாம்.
அவங்க இசை ஆசிரியையிடம், செக்-இன் பண்ணி, பையனை அவன் டீமில் விட்டு, அங்கு கொஞ்ச நேரம் மைதானத்தை நோட்டம் விட்டோம். அப்பப்பா என்ன ஒரு கூட்டம். எல்லா டீமும் தயாரகிக் கொண்டிருக்கின்றனர் ஊர்வலத்திற்கு. அதைப் பார்த்து என் மகளுக்கு ஒரே வருத்தம். நானும் அண்ணா கூடப் போறேன் எனப் பிடிவாதம் :((
இவர்களைப் பொறுத்தவரை இது ஒரு பண்டிகை நாள். ஆங்காங்கே பிரிந்து வாழும் குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து, ஆடிப் பாடி மகிழும் பண்டிகை. குழந்தைகளின் மனதில் ஒரு எதிர்பார்ப்பு, என்ன பரிசு நம்ம வீட்டில் நமக்குக் காத்திருக்கிறது என. சாண்ட்டா எங்கே அதை ஒளிச்சு வச்சிருப்பாரு என. இங்கே வளர்வதால் என்னவோ நம் குழந்தைகளுக்கு மனதில் ஒரு ஏமாற்றம், கேள்விகள். "ஏன் நாம கிறிஸ்துமஸ் கொண்டாடுவது இல்லை, எதாச்சும் கிஃப்ட் வாங்கி குடுப்பீங்களா ?, என் ஃப்ரென்ட்ஸ் எல்லாம் அங்க போறாங்க, இங்க போறாங்க (தாத்தா பாட்டி வீடுகள்). நாம் ஏன் எங்கேயும் போவதில்லை" என்றெல்லாம்.
ஊர்வலம் முடிவில் "ஓல்ட் ஹை" பள்ளியில் வந்து பையனை பிக்கப் செய்து கொண்டோம்.
மெர்ரி கிறிஸ்மஸ் என்று பலரும் பலருக்கும் சொல்லிய வண்ணம், ஊர்வலம் முழுதும், ஏராளமான கிறிஸ்துமஸ் பாடல்கள். எல்லோரும் பாடுகிறார்கள்.
இங்கே, மனதில் சில கேள்விக் கணைகள் !!! நம் ஊரில் இல்லாத பண்டிகைகளா ? அதற்கு விடாத விடுமுறைகளா ? தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ சிறப்புப் பாடல்கள் ஏதாவது இருக்கிறதா ? இருந்தால் அநேகருக்குத் தெரியாமல் போனது ஏன் ? இங்கே "ஜிங்கில் பெல்ஸ் ..." என்று ஆரம்பித்தால் பிஞ்சுக்கள் முதல் பெரியவர் வரை தலையாட்டிப் பாட முடிவது எப்படி ?
எனக்குத் தெரிந்து "நான் சிரித்தால் தீபாவளி" என்று நாயகன் படத்தில் வரும் பாடல் தான் நினைவுக்கு வருகிறது !!!
சிவாவும் பள்ளிக் குழுவினரும், பாடல் ஒத்திகை பார்க்கும் காட்சி:
