Tuesday, December 25, 2007

கிராமத்து மார்கழிக் காலை



கருக்கலின் போதே
கண் விழித்து

விருட்டென சிலவாளி
நீர் இறைத்து

சுருக்கெனச் சிலிர்க்க
மேனி நனைத்து

சுருட்டித் துண்டை
தலையில் கோர்த்து

உருக்கும் பனியில்
வாசல் தெளித்து

இருவிரல் திரித்து
வண்ணக் கோலமிட்டு

வருடும் காற்றில்
கேசம் பின்தள்ளி

ஒருபிடி சாணம்
கோலத்தின் நடுவில்

செருகும் பூசணிப்
பூவதன் அழகில்

பெருமைமிகு எம்குலப்
பெண்களைக் காண

மார்கழிக் காலை
மயக்கிடும் ஆளை !

Sunday, December 16, 2007

நச்சுனு ஒரு காதல் கதை

"டேய் ரவி அவ விடற லுக்கு நாளுக்கு நாள் தாங்க முடியலடா".

Outlook-ல் pop-ஆன "This evening special Dinner" click செய்து, "எவ அவ" என்று நக்கலுடன் ஆனந்தைப் பார்த்தான் ரவி.

ரவியும், ஆனந்தும் ஒரே அலுவலகத்தில் வேலை (மன்னிக்க) பொட்டி தட்டுபவர்கள். ஆனந்த் ஆறு வருடமாகவும், ரவி இரண்டு வருடமாகவும் ஆணி பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ரவி வெளிநாடுகளில் ஐந்து ஆண்டுகள் குப்பை கொட்டிவிட்டு, தாயகத்தில் குப்பைகள் அகற்ற (!) மற்றும் பெற்றோர்களுக்காக (!!) இந்தியா வந்து இந்த நைப்ரோ எனும் MNC கம்பெனியில் சேர்ந்திருக்கிறான்.

டேய் தினம் அவளப் பத்தித் தான பொலம்பறேன். அதான் அந்த எதிர்க்க இருக்க பில்டிங்கில் HR-ல வேலை செய்யறாளே பானு, அவளப் பத்தித் தான். லுக்கு தான் ஜாஸ்தியா இருக்கே தவிர்த்து பேசவே மாட்டேன்ங்கறா. இன்னிக்குக் காலைல 'வழக்கம் போல' கொஞ்சம் லேட்டா வந்தனா, வண்டிய பார்க் பண்ணிட்டு, அடிச்சுப் பிடிச்சு ஓடி வந்து lift எடுத்தா எதிர்த்தாப்புல நிக்கறா. அதே கண்ணு, அதே பார்வை ! அப்படியே தேவதை மாதிரி !!

அந்தப் பரபரப்பில் lift-ல் நீ இருந்தத கூட நான் கவணிக்கலை. காலரப் பிடிச்சு இழுத்தியே, நியாபகம் இருக்கா. மச்சி உன் கிட்ட தான்டா பொலம்ப முடியும். தப்பா எடுத்துக்காத டா.

என் கிட்ட மட்டுமா பொலம்பறே ! பக்கத்து cube பாஸ்கர் கிட்ட கூட தினம் அலுத்தக்கறியே டா. போன வாரம் அருண் வந்து 'உன் தொல்லை தாங்க முடியல'னு சொல்லி அவன் பொலம்பிட்டுப் போறான். "சரி இப்ப என்ன செய்யனும்" என்றான் ரவி

எனக்குத் தனியாப் போகப் பயமா இருக்கு. அவ கிட்ட இன்னிக்கு எப்படியாவது பேசிடனும்னு இருக்கேன். நீதான்டா ரவி அதுக்கு ஏதாவது நச்சுனு idea பண்ணி help பண்ணனும்.

"இந்தக் காலத்திலயும் இப்படி ஒரு புள்ளையா ?" டேய் அவனவன், காலைல சைன் போட்டு, ப்ரேக்ஃபாஸ்ட்ல பிட் போட்டு, லன்ச்சுல பன்ஞ்ச் வச்சு, டின்னர்-ல பின்னி பெடலெடுக்கறான். பேசப் பயமா இருக்காம், போடாங்க ....

இதான் நச்சா ... நல்லாத் தான் இருக்கு, எப்படி work-out பண்றது ?

ரெண்டு cube தள்ளி இருந்த அனு அங்கு வந்து, "ரவி இன்னிக்கு டின்னர் போறோமே, ஆனந்தும் வரட்டும்" என்று சொல்லி ரவியின் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து நகர்ந்தாள்.

அடப்பாவி, எனக்கு idea-ன்ற பேர்ல சும்மா அளந்துவிடறேனு பார்த்தால், உண்மையாவே டின்னெர் வரை போய்டியா. அது சரி, நான் வரேன். பானு எப்படி வருவா என்றான் ஆனந்த்.

அதப் பத்தின கவலய விடுறா. அனு பார்த்துப்பா என்றான் ரவி.

சாயந்திரம் ஆனந்தப் பிக்கப் செய்து கொண்டு "லீ மெரிடியன்" நோக்கி வண்டியைச் செலுத்தினான் ரவி.

"டேய் பானு கண்டிப்பா வருவாளாடா ?" என்று பொலம்பிக் கொண்டே வந்தான் ஆனந்த்.

hotel வரவேற்பறை படு பயங்கரமாய் இருந்தது. "நவரத்னா"விற்கு வழி கேட்டுச் சென்றனர் இருவரும். ஆனந்தின் படபடப்பைச் சொல்லி மாளாது. பாவம் ரவி, எல்லாப் பொலம்பலையும் சேர்த்து கேட்டு வந்து கொண்டிருக்கிறான்.

சற்று தொலைவில், நால்வர் அமரும் மேசையில் பானுவும், அனுவும் அமர்ந்திருப்பதைப் பார்த்த ஆனந்த், மென்று விழுங்கினான். லேசாகத் தன்னைக் கிள்ளிப் பார்த்து, "thanks டா ரவி" என்று மெலிதாகச் சொல்லிக் கொண்டான்.

மேசையை நெருங்கி இருவரும் அமர்ந்தனர்.

என்ன order பண்ணலாம் என்றான் ரவி. ஆனந்திற்கு எரிச்சலாய் இருந்தது. இப்ப என்ன order பத்திப் பேசறான். பானு கிட்ட எப்ப, எப்படி, என்ன பேசறது என்று மனதுள் குமைந்து கொண்டிருந்தான்.

முகவரி படித்து, டேய் என்னமோ பேசனும்னு சொன்னியேடா பானுவிடம், பேசு என்றான் ரவி.

என்னது காட்டான் மாதிரி போட்டு ஒடைக்கறான். இப்படியா எல்லார் முன்னாலயும் சொல்றது என்று ரவியை முறைத்தான் ஆனந்த்.

சரி ரொம்ப tension ஆகத என்ற ரவி, "பானு, உன்கிட்ட ஏதோ ஆனந்த் பேசனுமாம், அந்த private room இப்ப காலியாத் தான் இருக்கு, போய் ரெண்டு பேரும் பேசிட்டு வாங்க என்றான்.

நல்ல காரியம் பண்ணேடா ரவி இப்பவாவது என்றான் ஆனந்த்.

private room. மடை திறந்தோடும் வெள்ளமென ரத்த ஓட்டம் இருப்பதை உணர்ந்தான் ஆனந்த்.

அவன் எப்படிப் என்ன பேசுவது யோசித்துக் கொண்டிருக்கும் போதே, பானு பேச ஆரம்பித்தாள். எங்க வீட்டுல love marriage-க்கு ரொம்ப against. விசயம் வெளில தெரிஞ்சா ரொம்ப ப்ரச்சினை ஆயிடும். ரவி வீட்டுலயும் அப்படித் தான். அதான் ரெண்டு பேரும் இவ்ளோ நாள் அமைதியா இருந்திட்டோம். அனு வந்து என் கஸின் சிஸ்டர். அவ அப்பா கிட்ட மட்டும் விசயத்த சொல்லியிருந்தோம். அவர் இன்னிக்கு எங்க பேரன்ட்ஸ் கிட்ட பேசி, ஒரு வழியா எல்லோர் சம்மதமும் கிடைச்சிருச்சு. இந்த நிலமையில தான் ரவி இன்னிக்கு உங்களப் பத்தி சொன்னாரு. நானே உங்க கிட்ட எல்லாத்தையும் தெளிவா சொல்லிடறேன்னு ரவி கிட்ட சொல்லி, நான் தான் உங்கள கூட்டி வரச்சொன்னேன் என்றாள் பானு.

-----

வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி நண்பரே. இந்தக் கதை சர்வேசன் 'நச்சுனு ஒரு கதை' போட்டிக்காக எழுதி பதிந்திருக்கிறேன். ஒரு வரி பின்னூட்டம் போட்டு ஊக்கப்படுத்தினால் சந்தோசமாய் இருக்கும்.

Thursday, December 13, 2007

பாவரசன் பாரதி ? (ஒரு கற்பனைக் கவிதை)



மீசைக் கவி -- முண்
டாசுக் கவி -- கருங்
கோட்டுக் கவி -- பயமிலாப்
பாட்டுக் கவி -- எங்கள்
பாரதி !

-----

பாருக்குப் பா தந்து
பருத்த யானைக்குப் பழம் தர
பார்த்தசாரதி கோவில் சென்றாய்
பக்தர் வெள்ளமங்கே !

-----

கரிய நிறத்தந்த யானை
கண்கள் சிவந்து நிற்கக் கண்டீர்

முரசென அகன்றதன் காதுகள்
பட படக்கக் கண்டீர்

சுருண்டு நீளும் துதிக்கை மீண்டும்
சுருண்டு நீளக் கண்டீர்

பெரிய அதன் உருவம்
சரிந்து சரிந்தாடக் கண்டீர்

கூரிய அதன் விழிகள் கவியைக்
கூட்டத்தில் கீறித்தேடக் கண்டீர்

குழந்தையாய்க் கவியும் அதனருகே
கொஞ்சிச் செல்லக் கண்டீர்

-----

பயம் கொள்ளாப்
பா(க்கள்) எழுதிப்
பார் உயரப்
பாடுபட்டு
பாவரசன் ஆனாய் !

பாவரசன் உன்னை
பதம் பிரிக்கத் தெரியா
மதம் கொண்ட யானை
மிதித்துக் கொன்றதுவோ ?!

-----

பொருள் மாறும் காரணத்தால்
பாவரசன் நீக்கி
பாவிற்கதிபதி
பாரதி நீ என
பயந்த யானையிடம்
பார்ப்போர் சொல்லியிருந்தால் ...

இன்று நின்னுயிர்
நின்றிருக்குமோ எங்களுடன் !

ஏராளப் பாடல்கள்
இன்னும் கிடைத்திருக்கும் !